பிளாஸ்டிக் பாட்டில்களில் பொம்மைகள்: சேலம் சகோதரர்களின் புதிய முயற்சி
சேலம் உதவும் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சகோதரர்கள் இணைந்து, பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் அலங்காரப் பொம்மைகளை செய்து மாற்றுமுறை பயன்பாட்டு பொருளாக பிளாஸ்டிக்கை மாற்றியுள்ளனர்.
சேலம் அம்மாப்பேட்டை மாரியப்பா நகரில் வசித்து வரும் சகோதரர்கள் மணிவண்ணன் மற்றும் கண்ணன். பட்டதாரிகளான இவர்கள் ‘உதவும் நண்பர்கள் அமைப்பின்’ மூலம் சமூக பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களிடம் டியூஷன் படிக்க வரும் இளைய தலைமுறையினருக்கு, அன்றாட பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில், பாலிதீன் பைகளால் ஏற்படும் தீமைகள் மற்றும் அதன் பயன்பாட்டால் இயற்கை வளம் அழிவின் எல்லைக்கு சென்று கொண்டிருப்பதை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திருமண விழா, வீட்டு விசேஷ நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்பட்டு வீதிகளில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து தங்களிடம் டியூஷன் படிக்க வரும் மாணவ, மாணவியரை கொண்டு பொம்மைகள், மரம், செடி, கொடி, டைனோசர், ரோபோ, குழந்தைகளுக்கான குடில், அலைபேசி சார்ஜர் போடும் டப்பா, பூ ஜாடி, அப்துல்கலாம் உருவம், காலணிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களை தயார் செய்துள்ளனர்.
இந்த அலங்காரப் பொருட்கள் வீடுகளில் வரவேற்பு அறையில் வைப்பதன் மூலம் வீட்டுக்கு வரும் நண்பர்கள், உறவினர்கள் கவனத்தை ஈர்த்து அதன் மூலம் மண்ணை நஞ்சாக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், பிளாஸ்டிக் பாட்டிலை எரிப்பதால் டையாக்சின் வாயு வெளியேறி மனித குலத்துக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் தீமையில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். மழை நீர் நிலத்தடியில் சென்று சேராமல் தடுக்கும் பிளாஸ்டிக்கை, மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவதன் மூலம் நிலத்தடி நீர் வளத்தை பெருக்கலாம்.
இதுகுறித்து மணிவண்ணன் கூறிய தாவது: பிளாஸ்டிக்கின் தீமைகள் குறித்து அனைவரும் அறிந்திருந் தாலும், அதனை பயன்படுத்துவதை யாரும் தவிர்ப்பதில்லை. பயன்பாட் டுக்கு வந்து விட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை வீடுகளில் அலங்காரப் பொருட்கள் செய்து வைப்பதால், இயற்கைக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை முடிந்த அளவு தடுக்கலாம். இதன் அடிப்படையில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு அலங்காரப் பொருட்களை உருவாக்கி வருகிறோம்.
இதுகுறித்து மாணவ, மாணவியருக்கு இலவச பயிற்சி அளிப்பதோடு, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். பள்ளி நிறுவனங்கள் அழைத்தால், மாணவர்களுக்கு பிளாஸ்டிக் மூலம் அலங்காரப் பொருட்கள் செய்வது குறித்து இலவச பயிற்சி அளிக்க தயாராக உள்ளோம். பிளாஸ்டிக் பாட்டில்களை வீசி எறியாமலும், தீயில் எரிக்காமலும் அவரவர் கற்பனைக்கு ஏற்றவாறு அழகுப் பொருட்களை உருவாக்கி, அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என்று அவர் கூறினார்.
கருத்துகள்
கருத்துரையிடுக